×

சென்னையில் 2 புகார்கள் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு யூடியூபர் சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

* ஏராளமான போலீசார் தொடர்ந்து புகார், சேலம், நாகையிலும் வழக்குப்பதிவு

சென்னை: பெண் போலீசாரை ஆபாசமாக பேசிய யூடியூபர் சங்கர் மீது சென்னை, நாகை, சேலத்தில் அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், தேனி மாவட்ட போலீசார் சங்கரை கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த யூடியூபர் சங்கர், தமிழக காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் என அனைத்து பெண் போலீசாரையும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாக கோவையில் பெண் எஸ்.ஐ கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டர் சந்தியா ரவிசங்கர் சென்னை மாநகர குற்ற பிரிவில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை அவரது இணைய‌ பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு இந்திய தண்டனைச் சட்டம் 294பி, 354டி,506(1),509 மற்றும் பிரிவு 4 பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்ட படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழர் விடுதலைப்படையின் நிறுவனர் வீரலட்சுமியும், ஒரு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தமிழக பெண் காவலர்களை இழிவுபடுத்தி பேசியதாக தமிழக முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகார் அடிப்படையில் சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் சேனல் ஆகியோர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294பி, 506(1) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் சேலம் மாநகரத்தை சேர்ந்த எஸ்ஐ கீதா, யூடியூபர் சங்கர் மீது மாநகர சைபர் கிரைமில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ‘யூடியூப் சேனல் ஒன்றில் சங்கர் கூறிய கருத்துக்களால் பெண் போலீசார் அனைவரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் யூடியூபர் சங்கர் மீது 294 (பி) பிரிவின் கீழ் கெட்டவார்த்தையில் பேசுவது, 353வது பிரிவின் கீழ் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, 509வது பிரிவின் கீழ் அவதூறாக பேசுவது, உடன் இணைந்த 4வது பிரிவின் கீழ் பெண் வன்கொடுமை, துன்புறுத்துதல், மதிப்பை குறைத்து பேசுவது, 69வது பிரிவின் கீழ் தவறான தகவல்களை இணையதளத்தில் பரப்புதல் என 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்ய சேலம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சங்கர் மீது நாகையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல் பெண் போலீஸ் குறித்து ஆபாசமாக பேசியதை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சங்கர் மீது போலீசார் புகார்களை அளித்து வருகின்றனர். அதேநேரத்தில், யூடியூபர் சங்கர் கைதாகும்போது, தங்கியிருந்த அறையில் அவரது கார் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த ராம்பிரபு (22) மற்றும் உதவியாளரான சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் (43) ஆகியோரும் இருந்தனர்.

அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, 409 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் தங்கியிருந்த அறையினை சோதனை நடத்தியதில், கஞ்சா நிரப்பிய சிகரெட்கள், உலோகத்தினாலான கூம்பு வடிவ சிகரெட் நிரப்பும் குழாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பழனிசெட்டிபட்டி போலீசார், யூடியூபர் சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது கஞ்சா வைத்திருந்தது உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் சங்கரின் டிரைவர் ராம்பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினத்தை பழனிசெட்டிபட்டி போலீசார் போலீசார் கைது செய்தனர். யூடியூபர் சங்கருக்கு கஞ்சா கொடுத்தது யார் என தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவை சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன்(24) என்பவர் கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, உதயகுமார் தலைமையிலான போலீசார், ஆரக்குடியில் மகேந்திரனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சங்கரையும் கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்து உள்ளனர். இதற்கான உத்தரவை கோவை சிறையின் சூப்பிரண்டிடம் வழங்கினர். மேலும், 3 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் இருந்து மதுரையில் உள்ள போதைபொருள் தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் மாற்றப்பட உள்ளது.

* சிறையில் மருத்துவ குழு ஆய்வு
சங்கர் சார்பில் ஜாமீன் கோரி கோவை ஜே.எம்.4 கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சங்கருக்கு மருத்துவ உதவி தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரிக்க சட்ட பணிகள் ஆய்வு குழு மற்றும் 2 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று கோவை மத்திய சிறைக்கு சென்றனர். அவர்கள் சங்கரிடம் விசாரணை நடத்தினர். சங்கருக்கு மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டது. இந்த குழுவினர் சுமார் 3 மணி நேரம் ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த குழுவினர் ஆய்வு விவரங்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

The post சென்னையில் 2 புகார்கள் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு யூடியூபர் சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,YouTuber ,Shankar ,SALEM ,NAGAI ,YOUTUBER CHANKAR ,
× RELATED பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில்...